‘இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும்’

வாஷிங்டன்: இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டு படுமோசமாக இருக்கும் என்று அனைத்துலகப் பணநிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள அனைத்துலக பண நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குநரான கிறிஸ்டலினா ஜியார்ஜிவா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்த நிலையைச் சந்தித்து வருகிறது என்றும் இதற்கு முக்கிய காரணமாக பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை உள்ளதாக அவர் கூறினார். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப்போவதாக கணிக்கிறேன்.

ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ச்சி கண்ட நாடுகளில், பொருளாதார நிலை இயல்பாக இருக்கும். பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும். 
பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்றிணைந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் உலக அளவில் நாடுகளின் பொருளாதார போட்டித் திறன் குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 68வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அது சென்ற ஆண்டில் 58வது இடத்தில் இருந்தது.  ஜெனீவாவில் அமைந்துள்ள உலக பொருளாதாரக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், இந்த ஆண்டு மிக மோசமான செயல்பாடு கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலில் பிரேசில் 71 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக அளவில் அதிக போட்டியான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. 

அதிக போட்டியான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஹாங்காங் 3வது இடத்திலும், நெதர்லாந்து 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளன.  மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மை, சந்தை நிலவரம் ஆகியவற்றில் இந்தியாவின் நிலை உயர்வுடன் காணப்படுகிறது.  அதே சமயம், அதிக கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

சந்தை நிலவரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.