புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் நடைபெற்ற துர்கா சிலையைக் கரைக்கும் நிகழ்ச்சியில் குறைந்தது பத்து பேர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்து பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அன்று துர்கா சிலையை பார்பதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு சிறுவன் ஆற்றில் குதித்தான். அவனால் நீந்தி கரையேற முடியாததால் ஆற்றில் மூழ்கி மாண்டான். அந்த சமயத்தில் அவனை மீட்க வரிசையாக மேலும் சிலர் ஆற்றில் குதித்தனர். ஆனால் அவர்களும் மேலே வர முடியாமல் மூழ்கி மாண்டனர்.
சம்பவத்தைப் பற்றி பேசிய டோல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் ஜெய்ஸ்வால், பத்து பேர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம், முக்குளிப்பாளர்களை அழைத்து உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியது. ஆற்றில் மூழ்கி இறந்த குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

