பிற நாடுகள் தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தைத் தாம் அணுக்கமாகக் கண்காணிப்பதாக சீன அதிபர் ஸி ஜின்பிங், பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்த சில மணி நேரத்தில் இந்தியா இவ்வாறு கூறியது.
சீனா இந்தியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 2017-2018 நிதியாண்டில் இரு நாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 89.71 பில்லியன் டாலரை எட்டியது. ஆயினும், காலங்காலமாக அந்நாடுகளின் எல்லைப்பகுதியில் நீடித்துவரும் சர்ச்சையால், குறிப்பாக டோக்லாம் வட்டாரத்தில் ஏற்படும் மோதலால், இந்திய-சீன உறவு பாதிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கிய அங்கம் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருக்கிறார். "எங்கள் நிலைப்பாடு சீனாவுக்குத் தெரியும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி கருத்துரைப்பது மற்ற நாடுகளுக்குத் தகாது," எனறு அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது பல்வேறு அட்டூழியங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டும் பாகிஸ்தானுக்கு சீனா குரல் கொடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இதனைப் பற்றி பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு அனைத்துலகக் கூட்டங்களில் உரையாற்றி தனது நாட்டுக்காக ஆதரவு திரட்ட முயல்கிறார். சீனா காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் எழுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ளடங்கும் லடாக்கின் சில பகுதிகள் மீது சீனா உரிமை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
நாளை இந்தியா செல்லும் திரு ஸி, திரு மோடியுடன் மாமல்லபுரத்தில் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

