'பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை'

'பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை'

2 mins read
735af9c4-9de3-49de-865b-a7152be7fc62
-

சூரத்: நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி (படம்) கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

குறிப்பாக பிரதமர் மோடியை திருடன் என்று குறிப்பிட்டார். சூரத் நகரில் அவர் பேசுகையில், ''நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என்று எல்லாத் திருடர்களும் எப்படி மோடி என்ற பொது பெயரில் உள்ளனர்?" என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்களும் மோடி ஆதரவு மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் சூரத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான ஆணை அண்மையில் ராகுலுக்கு அனுப்பப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட ராகுல் நீதிமன்றத்தில் முன்னிலையாக முன் வந்தார். நேற்றுக் காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத் சென்றார்.

சூரத் நீதிமன்றத்தில் அவர் நீதிபதி முன்பு முன்னிலையானார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார்.

"பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் நான் தவறாக எதுவும் பேசவில்லை," என்று ராகுல் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த ராகுலுக்கு சூரத் காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர். ராகுல், மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டுச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் தங்கி இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இன்றைக்கும் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆமதாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ''கொலைக் குற்றவாளி'' என்று பேசினார்.

இதனால் ராகுல் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குக்காக 12ஆம் தேதியும் ராகுல் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று தெரிகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக வரும் ராகுலை வரவேற்க குஜராத் காங்கிரசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.