புதுடெல்லி: தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் டோன் பிரமுத்வினை மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு நேற்று புதுடெல்லி சென்றார். அங்கு நடைபெற்ற இரு நாட்டு வெளியுறவு அமைச்சுகளுக்கு இடையிலான 8வது கூட்டு ஆணைய சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டம் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தாய்லாந்து அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அமைச்சர் டான் பிரமுத்வினை இன்று தாய்லாந்து திரும்புகிறார்.
கடந்த மாதம் இந்தியா மற்றும் தாய்லாந்துப் படைகள் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியின்போது அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள், ஹெலிகாப்டரைக் கையாள்வது மற்றும் காடுகளிலும் நகரத்திலும் நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதலைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

