புதுடெல்லி: நவீன காவல்துறையை உருவாக்குவதற்கேற்ப தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்துவதில் போலிசார் முக்கிய பங்காற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2018ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் 126 இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், காவல்துறை அதிகாரிகள் முதலில் தங்களை நூறு விழுக்காடு நம்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.
"அலுவலக பயிற்சியுடன், தன்னம்பிக்கையுடன் கூடிய உள்ளார்ந்த ஆற்றலும்தான் தினந்தோறும் நீங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள கைகொடுக்கும்.
"போலிசார் தங்கள் தினசரி பணியில் சேவை மற்றும் அர்ப்பணிப்பை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.
குறிப்பாக சாதாரண குடிமக்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்பின் முக்கியத்துவத்தை போலிசார் உணரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், காவல்துறை பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டத்தை ஒவ்வொரு அதிகாரியும் உணர்ந்து கொள்வதுடன், தங்களை பொதுமக்கள் எளிதில் அணுகும் நிலையையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
போலிசார் பொதுமக்களின் நண்பர்களாக மாறவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சிறப்புமிக்க தேசத்தை உருவாக்கும் வகையில் அயராது உழைத்து வரும் இளம் அதிகாரிகளைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
"2018ஆம் ஆண்டு பிரிவில் ஏராளமான பெண்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

