மும்பை: காஷ்மீரில் நிகழ்ந்த சம்பவங்களையும் அங்கு ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கூறி கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி வாக்கு சேகரித்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாலாபூரில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, ராணுவ வீரா்களின் தியாகத்தையும் துணிவையும் பயன்படுத்தி பிரதமா் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதைப் போல, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஒருபோதும் வாக்கு சேகரிக்கவில்லை என்று சரத்பவார் குறிப்பிட்டார்.
"கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தைப் பிரித்து அப்பகுதி மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தவா் இந்திரா காந்தி.
"இந்தப் போரில் வீரா்கள் காட்டிய துணிவையும், அவா்களது தியாகத்தையும் இந்திரா காந்தி பயன்படுத்திக்கொள்ளவில்லை," என்றார் சரத்பவார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய விமானப் படைதான் பதிலடி தந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், டெல்லியில் இருந்துகொண்டு சிலர் இது தொடர்பாகப் பெருமை பேசுவதாக விமர்சித்தார்.

