பிரதமர் மோடியைவிட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றார்: அமித் ஷா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்றிருக்கிறார் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சி குறைகூறியதற்குப் பதிலடியாக வியாழக்கிழமை அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும் அவர் சொன்னார். 

“மோடி எங்கு சென்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடிநின்று ‘மோடி-மோடி’ என உற்சாகத்துடன் முழங்குவது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. அதனால்தான் மோடி ஏன் இவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறார் எனக் கூறுகிறார்கள்,” என்றார் திரு அமித் ஷா. மக்களின் முழக்கம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அவர் கருத்துரைத்தார். 

சென்ற மாதம் அமெரிக்காவின் ஹூஸ்ட்டன் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தைச் சுட்டிக்காட்டிய திரு ஷா, நரேந்திர மோடியே “உலகின் ஆகப் பிரபலமான பிரதமர்” என்பதை அந்நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியதாகவும் சொன்னார். 

பிரதமர் மோடிக்கு முன்பாகப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் மோடியை ஒப்பிட்டுப் பேசினார் திரு ஷா. 

“மன்மோகன்ஜி மேடம் எழுதிக்கொடுத்த காகிதத்திலிருந்து வாசித்தார். சில சமயங்களில் ரஷ்யாவில் வாசிக்கவேண்டியதை மலேசியாவிலும், மலேசியாவில் வாசிக்கவேண்டியதை ரஷ்யாவிலும் வாசித்தார்,” என்று அவர் கூறினார். 

உலகச் சுற்றுப்பயண தினமான செப்டம்பர் 27ஆம் தேதி, பிரதமர் விமானத்தில் ஏறுவதையும் இறங்குவதையும் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பை காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்டது. அதோடு, “உலகச் சுற்றுப்பயண தின வாழ்த்துக்கள்” என்ற வாசகமும் படத்தொகுப்புடன் வெளியிடப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதன் தொடர்பில், எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியைக் குறைகூறி வருகின்றன. ஆனால், பிரதமர் மோடியின் திறன்வாய்ந்த அரசதந்திர உறவுகளால் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்வதாகவும் நிறைய முதலீடுகள் கிடைப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது. 

பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் பதவியை ஏற்றபிறகு, இதுவரை 48 வெளிநாட்டுப் பயணங்களில் 55க்கும் மேலான நாடுகளுக்கு வருகை அளித்திருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சில நாடுகளுக்கு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றிருக்கிறார். 

இதே காலகட்டத்தில், இந்தியாவுக்குக் கிடைத்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் பெருகின.