இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாய்லாந்தில் மரணம்

இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பிரக்யா பலிவால் வருடாந்திர மாநாடு ஒன்றுக்காக புக்கெட் நகருக்குச் சென்றதாக அவரது சகோதரர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார். 

பிரக்யாவின் குடும்பத்தினரில் எவரிடமும் கடப்பிதழ் இல்லாததால் தாய்லாந்து மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் சடலத்தை அவர்களால் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு முழு ஆதரவு வழங்கவும் பிரக்யாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரவும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதி அளித்திருக்கிறது.

உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடன் பேங்காக்கிலுள்ள இந்தியத் தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். அவர்களுக்குக் கடப்பிதழ்களைப் பெற்றுத் தர இந்திய அதிகாரிகள் துரிதமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.