சுடச் சுடச் செய்திகள்

இந்திய ராணுவம்: பாகிஸ்தான் பெருந்தாக்குதல் நடத்த சதி

ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு உரிமை நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக இந்தியாவின் ராணுவத் துணை தலைமைத் தளபதி ரன்பீர் சிங், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளையில், பஞ்சாப்பின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்திய வேவுத்துறை எச்சரிக்கை  விடுத்து இருப்பதை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள பதன்கோட், குர்தாபூர் ஆகிய எல்லைப் புற மாவட்டங்களில் 5,000 போலிஸ் அதிகாரிகள் பெரிய அளவில் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.   

காஷ்மீருக்கான சிறப்பு உரிமை நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தங்கள் நாட்டில் பயற்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை காஷ்மீர் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் துணை தலைமைத் தளபதி கூறினார்.

“காஷ்மீருக்கான சிறப்புச் சலுகைகள் அகற்றப்பட்டதில் இருந்து இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. 

“இதற்காக, அந்த பயங்கரவாதிகள் அனைவரும் பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ சரியான நேரத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்பதால் காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் இரவு  பகலாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தாலும் பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் ராணுவமும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா உறுதியாக முறியடிக்கும். என்றும் தளபதி ரன்பீர் சிங் திட்டவட்டமாக மேலும் தெரிவித்தார்.