ஹைதராபாத்: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் வேலையிழந்ததாக அறிவிக்கப்பட்டதன் தொடர்பில் அங்கு போராட்டம் வலுத்து வருகிறது.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச ரெட்டி எனும் ஓட்டுநர் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துபோனார்.
இதற்கிடையே, ஸ்ரீனிவாச ரெட்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு கூடிய போக்குவரத்து ஊழியர்கள் தெலுங்கானா அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.
கம்மம் மாவட்டத்தில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. சாலையில் செல்லும் அரசு பேருந்துகளைச் சிறைப்பிடித்தல், பேருந்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களும் நேற்று நிகழ்ந்தன.
தெலுங்கானாவில் உள்ள அரசுப் பேருந்துக் கழக ஊழியர்கள் சுமார் 50,000 பேர், தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தசரா பண்டிகைக்கு முன்னதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், விழாக்காலத்தில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் உடனே பணிக்குத் திரும்ப அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்ட 48,000 பேரும் பணியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 5200 பேருந்துகளை இயக்க முன்னுரிமை அடிப்படையில் ஓட்டுநர்களும், 3,100 பேர் தற்காலிக ஓட்டுநர்களும் நியமிக்கப்பட்டு பேருந்துகளை தெலுங்கானா அரசு இயக்கி வருகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, போக்குவரத்துக்கு இடையூறாக தொழிலாளர்கள் யாரேனும் மறியல், போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களைக் கைது செய்யுமாறு காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து பணிமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தீக்குளித்த ஓட்டுநர் இறந்துபோன நிலையில், "போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் அவர்கள் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். இதுபோன்ற போராட்டத்துக்கெல்லாம் நான் அச்சப்படமாட்டேன். சாலையில் செல்லும் பேருந்துகளைத் தடுத்தல், பணிமனைக்குள் நுழைந்து பேருந்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு பார்த்துக்கொண்டிருக்காது. கடும் நடவடிக்கை எடுக்கும்," என்று திரு ராவ் குறிப்பிட்டுள்ளார்.

