'வருமான வரிச் சோதனையால் அவமானம்'

'வருமான வரிச் சோதனையால் அவமானம்'

1 mins read

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் 40 வயதான எம்எஸ். ரமேஷின் சடலம் தொங்கியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வராவின் தனிப்பட்ட உதவியாளர். பரமேஸ்வராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ரமேஷ், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திரு பரமேஸ்வரா, காங்கிரஸ் தலைவர் ஆர்எல். ஜாலப்பா ஆகியோருக்குச் சொந்தமான 32 கல்வி நிறுவனங்கள், சொத்துகள் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ரூ.300 கோடி அளவிலான மாபெரும் மோசடி நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 60 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் 10 கோடி ரூபாய் ரொக்கமும் சிக்கியது.

சோதனை முடிந்த சில மணி நேரங்களில் ரமேஷின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ரமேஷின் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் ரமேஷ் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், விசாரணையால் அவமானம் அடைந்ததால் இந்த முடிவை எடுப்பதாகவும் தனது குடும்பத்தாரைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.