சுடச் சுடச் செய்திகள்

ஐஎஸ்ஸுடன் தொடர்பு: 127 இந்தியர்கள் கைது

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இந்தியாவில் அண்மைய ஆண்டுகளில் 127 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை ஆய்வாளர் அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். அவர்களுள் ஆக அதிகமாக தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 33 பேர் கைதாகினர். 

அடுத்தடுத்த இடங்களில் உத்தரப் பிரதேசம் (19), கேரளா (17), தெலுங்கானா (14), மகாராஷ்டிரா (12), கர்நாடகா (8) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கைதான மற்றவர்கள் டெல்லி, உத்தரகண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கைதானவர்களுள் பெரும்பாலானவர்கள் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாயக்கின்  உரைகளால் கவரப்பட்டு, சுயதீவிரவாதப் போக்கை நாடினர் என்று திரு மிட்டல் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடுப்புக் குழுக்களிடம் நேற்று உரையாற்றியபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 

2016 ஜூலை மாதம் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ‘ஹோலி ஆர்ட்டிசன் பேக்கரி’யில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஸாகிர் நாயக்கிற்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவரைக் கைது செய்யும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்தியது.

ஆனால், 2017ஆம் ஆண்டு மலேசியாவில் தஞ்சமடைந்த ஸாகிர், அந்நாட்டின் நிரந்தரவாசத் தகுதியைப் பெற்று அங்கேயே வசித்து வருகிறார்.

மும்பையில் பிறந்த இவர், ‘பீஸ் டிவி’ என்ற ஒளிவழியைத் தொடங்கி, தமது சித்தாந்தங்களைப் பரப்பி வந்தார். 

மலேசியாவிலும் சர்ச்சைக்குஉரிய வகையில் பேசியதால் இவர் அந்நாட்டின் எந்தப் பகுதியிலும் பொது நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை நாடுகடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இவரை இந்தியாவிற்குத் திருப்பியனுப்ப மலேசியா தயங்குகிறது. மாறாக, வேறு எந்த நாடாவது இவரை ஏற்றுக்கொள்ள விரும்பினால் அங்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிளைபரப்பும் பங்ளாதேஷ் பயங்கரவாத அமைப்பு

இதனிடையே, பங்ளாதேஷைச் சேர்ந்த ஜமாத் உல் முஜாகிதீன் (ஜேஎம்பி) என்ற அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும் கிளைபரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி கூறியிருக்கிறார். ஜேஎம்பி தலைமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகள் 125 பேரின் பட்டியலைப் பல மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பங்ளாதேஷ் குடியேறிகள் என்ற போர்வையில் அவர்கள் ஜார்க்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பரவி இருப்பதாக அவர் சொன்னார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பெங்களூரில் மட்டும் 20-22 பதுங்கிடங்களை அமைத்துள்ள ஜேஎம்பி, தென்னிந்தியாவில் வேர்விடும் முயற்சியைத் தீவிரப்படுத்தி இருப்பதாக திரு மிட்டல் தெரிவித்தார்.

மேலும், கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் ராக்கெட் ஏவுகணைச் சோதனையை அந்த அமைப்பு நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவலநிலைக்குப் பதிலடி தரும் விதமாக பௌத்த ஆலயங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் முனைப்புடன் ஜேஎம்பி அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon