சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்

மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் 90 லட்சம் ரூபாயை சேர்த்து வைத்திருந்தார் 51 வயதான சஞ்சய் குலாட்டி.  

ஜெட் ஏர்வேசின் முன்னாள் ஊழியரான அவர் தமது கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

பிஎம்சி வங்கி 6,500 கோடி ரூபாய் கடன் மோசடியில் சிக்கியிருப்பது அண்மையில் வெளியானது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், மாதத்திற்கு 25,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டன. இதைக் கண்டித்து நேற்று நீதிமன்றத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு சஞ்சய் தனது 80 வயது தந்தையுடன் சென்றார். போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சஞ்சய் குலட்டியின் வீட்டில் கூடிய சிலர், தங்களுக்கும் அந்த வங்கியில் கணக்கு இருப்பதாகவும் குலாட்டியின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றும் வருத்தம் தெரிவித்தனர். மற்றொருவர், தமது வீட்டில் ஆறு பேருக்கு அந்த வங்கியில் கணக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.