முதல்வர் வேட்பாளராக கங்குலியை நிறுத்த பாஜக திட்டம்

முதல்வர் வேட்பாளராக கங்குலியை நிறுத்த பாஜக திட்டம்

2 mins read

புதுடெல்லி: பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைக் காட்டிலும் சவுரவ் கங்குலி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திதான் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

மேலும், 2021 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படக் கூடும் என்ற தகவலும் இணையச் செய்திகளில் வெளியாகி வருகின்றன.

மேற்கு வங்கத்தை திரிணாமூல் காங்கிரசின் பிடியிலிருந்து விலக்கி தனது அரசாங்கத்தை ஏற்படுத்த பாஜக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேலாக கால அவகாசம் இருப்பதால் இப்போதிருந்தே தீவிர ஏற்பாடுகளில் அக்கட்சி இறங்கி உள்ளது.

கடந்த சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சவுரவ் கங்குலி சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவரும் சுமார் ஒரு மணிநேரம் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வாக இருக்கும் தகவல் வெளியானது.

அந்தச் சந்திப்பின்போது பாஜகவில் கங்குலி சேருவது குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அமித் ஷா அந்தத் தகவலை மறுத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நாங்கள் அரசியல் பேசவில்லை. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்காக கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக தகவலைப் பரப்புகிறார்கள். நான் அத்தகைய பேரம் எதையும் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பாஜக தயாராக உள்ளது.

"எந்தவோர் இந்திய குடிமகனும் தேடிப் பிடித்து சேரவேண்டிய கட்சி பாஜக. மேற்கு வங்கத் தேர்தலுக்காகவே கங்குலியை நாங்கள் தேடுவதாகச் சொல்வது தவறு. எந்த பிரபலமும் இல்லாமலேயே அங்கு 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வரும் தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவோம்," என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின்போதும் கங்குலியைச் சேர்க்க பாஜக முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.