போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்லவிருந்த இலங்கை பெண் ஹாங்காங்கில் சிக்கினார்

சென்னை: இரண்டு பாஸ்போர்ட்களுடன் வந்திறங்கிய இளம்பெண் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். 

இலங்கையின் நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் லிஷாந்தி, 27. இவர் கொழும்பு நகரில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி அவர் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தார். அவரிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் லிஷாந்தி சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏறவில்லை. அவர் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் லிஷாந்தி சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏறாததும் அதற்குப் பதில் ஹாங்காங் வழியாக நியூசிலாந்தில் ஆக்லாந்துக்குச் செல்லும் விமானத்தில் ஏறியதும் தெரியவந்தது.

விசாரணையில் அவர் கனடா நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் ஆக்லாந்து விமானத்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனே ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஹாங்காங் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் லிஷாந்தியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

பின்னர் அவரை சென்னைக்குத் திருப்பி அனுப்பினர். சென்னை விமான நிலையத்துக்கு வந்த லிஷாந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவரது கணவர் சஞ்சீவன் என்பதும் அவர் ஆக்லாந்தில் வசிப்பதும், அவரை சந்திக்க போலி பாஸ்போர்ட்டில் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதற்காக அவர் இலங்கையில் உள்ள போலி பாஸ்போர்ட் ஏஜெண்டு ஒருவரை தொடர்புகொண்டுள்ளார். அவர் கனடா நாட்டு போலி பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார். உதயாமலர் சிவநேசன் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் கொடுத்தார். மேலும் சென்னையில் இருந்து ஆக்லாந்து செல்லவும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதற்காக அந்த ஏஜெண்டுக்கு முன் பணமாக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். இரண்டு பாஸ்போர்ட்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்த லிஷாந்தி போலி பாஸ்போர்ட்டு மூலம் ஆக்லாந்து செல்ல முயன்றுள்ளார். தனக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்த ஏஜென்டின் பெயர் சஞ்சீவ் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து லிஷாந்தியை அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பினார்கள். இந்தச் சம்பவத்தின் பின்னணியை விசாரித்தபோது போலி பாஸ்போர்ட்களைத் தயாரித்து வழங்கும் பெரிய கும்பல் இயங்கி வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்