கல்கி சாமியாருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை

சித்தூர்: இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வந்த கல்கி  சாமியாருக்குச் சொந்தமான ஆசிரமங்கள்,  தொழில் நிறுவனங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று  சோதனை நடத்தினர். 

இன்னும் ஓரிரு நாளில் வரிஏய்ப்பு,  கணக்கில் வராத பண நிலவரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. கல்கி சாமியாருக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார் எனும் கல்கி பகவான் ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமம் அமைத்தார். 

இவரது மகன் கிருஷ்ணா சொந்தமாக ஐ.டி. நிறுவனங்களையும் கட்டுமானத் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் 1,500 கோடி அளவிற்கு  சொத்துகளும் கல்கி ஆசிரமத்திற்கு  இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஒன்னெஸ் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகமும் இந்த ஆசிரமத்திற்கு உள்ளது.

அண்மைகாலமாக கல்கி ஆசிரமம் தொடர்பாக சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதுதவிர பணப்பரிமாற்றம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.