புதுடெல்லி: கடத்திச் செல்லப்பட்ட 13 கிளிகள் உயிரோடு பத்திரமாக இருந்த நிலையில் அவற்றை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.
டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போது ஒரு நபர் காலணி பெட்டிக்குள் கிளிகளை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கிளிகளைப் பறிமுதல் செய்து, கிளிகளை கடத்த முயன்ற ஆடவரை போலிசார் கைது செய்தனர். பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் 13 கிளிகளையும் அதைக் கடத்த முயன்ற ஆடவரையும் முன்னிலைப்படுத்தினர். இவர் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
போலிசாரின் விசாரணையில், கிளியை உஸ்பெகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாகவும் கிளிகளுக்கு அதிக பணம் தருவதாக சிலர் கூறியதால் கடத்த முயன்றதாகவும் அந்த ஆடவர் கூறினார்.
இதையடுத்து, கிளிகளைக் கடத்தியவர் நீதிமன்றத்தில் பிணை மனு அளிக்க, டெல்லி நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து 13 கிளிகளும் ஒக்லா பறவைகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டன.

