சுடச் சுடச் செய்திகள்

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் பல காலமாக இயங்கி வந்த தங்கக் கடத்தல் கும்பலை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கும்பலைச் சேர்ந்த 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம், கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து 13 குழுக்களாக பிரிந்து 23 இடங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் புதன்கிழமை (அக்டோபர் 16) அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி.

கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் கடத்தல் தங்கம் கொண்டு வந்தவர்கள், இருவர் கடத்தல் தங்கத்தை வைத்திருந்தவர்கள். இந்தக் கும்பல் தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, கோவையில் இருந்து கடத்தல் தங்கத்தை கொண்டு வந்துள்ளனர் என்று கேரள சுங்க இலாகா ஆணையர் சுமித்குமார் தெரிவித்தார்.

பிடிபட்டவர்களைத் தவிர 100க்கும் மேற்பட்டோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.