மாணவர்களிடம் 'புதுமை'யைப் புகுத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கல்லூரி

மாணவர்களிடம் 'புதுமை'யைப் புகுத்தி வாங்கிக் கட்டிக்கொண்ட கல்லூரி

2 mins read
d7a72128-9f15-42c8-ada3-11cca1f4a9c0
-

தேர்வில் காப்பி அடிப்படைத் தடுக்க கர்நாடக மாநில கல்லூரி ஒன்று வினோத முறையைப் பின்பற்றியது இப்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. அங்கு உள்ள ஹவேரி மாவட்டத்தில் பகத் தொடக்கக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை வேதியியல் தேர்வு நடைபெற்றது.

பக்கத்தில் இருக்கும் மாணவரைப் பார்த்து எழுதாமல் இருக்கவும் 'பிட்' எடுத்து எழுதுவதைத் தடுக்கவும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் மூடும் வகையில் தலை வழியாக அட்டைப்பெட்டி கவிழ்த்தப்பட்டது. பெட்டியின் முன்பக்கம் சிறிதளவு திறக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது. அது வினோதமாகக் காட்சியளிக்கவே மாணவர் ஒருவர் தமது கைபேசி வழியாகப் படம் எடுத்து வெளியே கசியவிட்டார். அதனை அறிந்ததும் கொதித்துப்போய் பலரும் கல்லூரி நிர்வாகத்தை அணுகினர். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் பேசிய கல்லூரியின் இயக்குநர் எம்.பி. சதீஷ், "எங்கள் நோக்கம் மாணவர்களைத் துன்புறுத்துவது அல்ல. காப்பி அடிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய யோசைனையை சோதித்துப் பார்த்தோம். அவ்வளவுதான்.

"மேலும் மாணவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இதனை அறிமுகம் செய்தோம்," என்றார்.

மேலும் பீகாரில் உள்ள ஒரு கல்லூரியில் 'புதுமை' முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தாங்களும் அதனைப் பின்பற்றியதாக அவர் கூறினார். ஆனால் இந்த சமாதானக் கூற்றை ஏற்காத மாநில கல்வித் துறை, கல்லூரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. "கொஞ்சம்கூட ஏற்கத்தக்க செயல் அல்ல இது," என்று மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் கண்டித்துள்ளார். மேலும் இச்செயல் மனிதாபிமானமற்றது என தொடக்கக் கல்லூரி வாரிய துணை இயக்குநர் கண்டித்துள்ளார்.