பெங்களூரு: வேறொரு பெண்ணின் கணவருடன் வாழ விரும்பிய பெண் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க எண்ணி பேரம் பேசினார். 17 லட்ச ரூபாயில் தொடங்கிய பேரம் 5 லட்ச ரூபாயில் முடிந்தது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பெண், இனிமேல் தன் கணவரைச் சொந்தம் கொண்டாட மாட்டேன் என்று கூறி தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான ஆடவர் தன் மனைவியுடன் தங்காமல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். நீண்ட காலமாகவே இருவரும் பழகிவந்த நிலையில் இந்த விஷயம் அவரது மனைவிக்குத் தெரிய வந்தது. அவர்களைக் கண்காணித்த மனைவி கணவரைக் கண்டித்தார். ஆனால் கணவரோ தனது வீட்டுக்குச் செல்வதையும் மனைவியுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். கணவரைத் தேடிச் சென்ற மனைவி, தனது கணவர் அவரது காதலியுடன் இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்தார். அப்போது பெண்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின்போது, அந்த ஆடவரின் மனைவிக்கு கடன் இருப்பதை அறிந்துகொண்டு, பணம் கொடுத்து சரிக்கட்ட எண்ணினார் கணவரின் காதலி. "கடனை அடைக்க பணம் தருகிறேன். அதற்கு பதிலாக உன் கணவரை விட்டுத்தர வேண்டும்" என கேட்டுள்ளார். முதலில் தயங்கிய மனைவி, சிறிதுநேரத்தில் அந்த பெண்ணின் பேச்சைக் கேட்டு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார். நீண்ட பேரத்துக்குப் பிறகு ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு கணவரை விட்டுக்கொடுக்க மனைவி ஒப்புக்கொண்டார். பணத்தைப் பெற்றுக்கொண்டு, கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் மனைவி.
ரூ.5 லட்சத்துக்கு விலைபோன கணவர்
2 mins read

