புதுடெல்லி: பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது பயணத்தைக் கைவிட்டுள்ளார்.
சென்ற மாதம் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினார். "காஷ்மீரில் 80 லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது, மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும். அனைத்துலக சமூகம் அக்கறை கொண்டு விவகாரத்தைக் கவனிக்க வேண்டும்," என்று எர்டோகன் பேசி இருந்தார்.
அதிபர் எர்டோகனின் பேச்சுக்கு இந்திய அரசு தரப்பில் பதிலடி தரப்பட்டது.
மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் அளித்த பேட்டியில், "காஷ்மீர் குறித்து நன்கு புரிதலோடு துருக்கி அதிபர் பேசவேண்டும். காஷ்மீரைப் பற்றிப் பேசும்முன் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்," எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாரிஸ் நகரில் அண்மையில் தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பான எப்ஏடிஎஃப் கூட்டத்தில் துருக்கி, சீனா, மலேசியா ஆகியன பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஐ.நா.சபையில் காஷ்மீர் பற்றி அதிபர் எர்டோகன் தெரிவித்த கருத்து, தீவிரவாத நிதித்தடுப்புக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டது போன்ற காரணங்களால் பிரதமர் மோடி தமது துருக்கி பயணத்தை ரத்து செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
வரும் 27, 28 தேதிகளில் சவூதி அரேபியாவில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து துருக்கி சென்று அந்த நாட்டு அதிபர் எர்டோகனைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது துருக்கியுடன் வர்த்தகம், பாதுகாப்புத் துறைஒத்துழைப்பு போன்றவை குறித்து பிரதமர் மோடி விவாதிக்க இருந்தார்.

