ஹைதராபாத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தது.
ஹைதராபாத்தின் 'சைன்' மருத்துவமனையில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஐந்து மாதக் குழந்தை பலியாகியதுடன் அங்கிருந்த மேலும் ஐந்து குழந்தைகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு அறை உள்ளது. 'இன்குபேட்டர்'களில் ஆறு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளும் வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது இதுபோன்ற தீச்சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின்போது மருத்துவமனை ஊழியர்கள் எங்கிருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

