துப்பாக்கிச்சூட்டில் தப்பிய வேட்பாளர்

துப்பாக்கிச்சூட்டில் தப்பிய வேட்பாளர்

2 mins read

மும்பை: மகாராஷ்டிர சட்டசபைக்கும் பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா சட்டசபைக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களிலும் தொடக்கம் முதலே வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஹரியானாவில் 33.34 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 21.02 விழுக்காடும் வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் என்பதால் இத்தேர்தல் முடிவுகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆனால் குறைந்த விகிதத்தில் வாக்குப்பதிவு நடந்ததால் அரசியல் கட்சிகள் கலக்கத்தில் மூழ்கின. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள மோர்ஷி-வாருத் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுவாபிமானி கட்சி வேட்பாளர் தேவேந்திர பூயார் அதிகாலை 5.30 மணியளவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

முகமூடி அணிந்த 5 அல்லது 6 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் அங்கு கூடினர். இதனைத் தொடர்ந்து தேவேந்திர பூயார் வாகனத்திற்கு தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். தேவேந்திர பூயார் அமராவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.