புதுடெல்லி: ப. சிதம்பரத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரது விசாரணை காவல் வரும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நீதிமன்றத்தில் அவர் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதற்கிடையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 18ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகையை நேற்று விசாரணைக்கு ஏற்ற சிபிஐ நீதிமன்றம் விசாரணைக்காக நாளை மறுதினம் (24ஆம் தேதி) ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

