அசாம் அதிரடி: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடையாது

அசாம் அதிரடி: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடையாது

1 mins read
e6fa9196-2da0-40b6-b4b1-1832152048a0
அசாமின் மக்கள்தொகை 2018ஆம் ஆண்டில் 3.5 கோடியைத் தாண்டியிருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம் -

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வோருக்கு அரசாங்க வேலை கிடையாது என்னும் அதிரடி சட்டத்தை அசாம் மாநில அரசு 2021ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறது.

நேற்று (அக்டோபர் 21) மக்கள்தொகைக் கொள்கை வரைவை அசாம் மாநில அரசு வெளியிட்டது. 2018ஆம் ஆண்டில் அசாமின் மக்கள்தொகை 3.5 கோடியைத் தாண்டியிருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கொள்கைகளை அம்மாநில அரசு வகுத்துள்ளது.

அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்ட கொள்கை வரைவில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படமாட்டாது. வேலை வாய்ப்புக்காக அரசு வழங்கும் நலத் திட்டங்களும் அவர்களுக்குக் கிடைக்காது.

சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசு வேலையில் இருப்பதற்கான தகுதி கிடையாது.

அசாமில் அனைத்து பெண்களுக்கும் பல்கலைக்கழகப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பெண்களுக்கு அரசு வேலையில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்தப் புதிய கொள்கை வரைவு குறித்து ஜூலை மாதம் வரை அசாம் மக்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர், சட்டமன்றக் கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு, விதிமுறைகள் வகுக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்