இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாண்டின் அணிசேரா இயக்கத்தின் சந்திப்பில் நேரடியாகக் கலந்துகொள்ளப்போவதில்லை. அந்நாட்டின் துணை அதிபர் வெங்கையா நாயுடு, திரு மோடியைப் பிரதிநிதித்து அஸர்பைஜானின் பாக்கு நகரில் நாளை மறுநாள் நடைபெறும் அந்தக் கூட்டத்திற்குச் செல்கிறார்.
இந்த இயக்கத்தின் சந்திப்பில் திரு மோடி கலந்து கொள்ளாதது இது இரண்டாவது முறை. 2016ஆம் ஆண்டில் வெனசுவேலாவில் நடந்த அந்தச் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை.
திரு மோடி அந்தச் சந்திப்பிற்குச் செல்லாதது இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அணிசேரா இயக்கத்தை நிறுவிய நாடுகளில் இந்தியா ஒன்றாக இருந்தது. இந்த இயக்கத்தின் உறுப்பு நாடுகள், வல்லரசுகளைச் சார்ந்திருக்காமல் சுயேட்சையாகத் தங்களது வெளியுறவு கொள்கைகளைப் பின்பற்ற இயக்கம் வழிசெய்தது.
காலனித்துவம், இனவாத ஆட்சி போன்ற சக்திகளை எதிர்கொள்ள அந்த இயக்கம் கடந்த காலத்தில் உதவி செய்தபோதும், அனைத்துலக பயங்கரவாதம் உள்ளிட்ட இப்போதைய பிரச்சினைகளுக்கு இயக்கம் அவ்வளவாக உதவாது என மோடி அரசாங்கம் நம்புவதாக அனுமானங்கள் எழுந்துள்ளன.

