பனை எண்ணெய் விவகாரத்தில் புதிய திருப்பம்

பனை எண்ணெய் விவகாரத்தில் புதிய திருப்பம்

2 mins read
7055dd2f-f3b5-4128-8375-01da23847a7a
-

கோலாலம்பூர்: மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பனை எண்ணெய் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய வர்த்தகச் சங்கம் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவேண்டாமென தென்னிந்திய அரசியல் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்தால், தற்போது மலேசியாவில் வேலை செய்யும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என தமிழ் நாடு காங்கிரஸ் குழு கூறியுள்ளது.

மலேசியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் உணவகங்களிலும் குறைந்தது 500,000 தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்வதாக காங்கிரஸ் குழுவின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

"இந்தியாவில் வாழும் தங்கள் குடும்பத்திற்குச் சம்பளத்தில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்," என தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் அறிக்கை வெளியிட்டார்.

மலேசிய இந்தியச் சமூகத்தினர் பலரும் மலேசியாவின் பனைமரத் தோட்டங்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்வதால், பனை எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என திரு அழகிரி விளக்கமளித்தார்.

"எனவே, மலேசியாவிலிருந்து பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவேண்டாமென மோடி அரசாங்கத்திடம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது," என்றார் அவர்.

உலகின் ஆகப்பெரிய காய்கறி எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, பனை எண்ணெய் விநியோகத்திற்கு இந்தோனீசியாவையும் மலேசியாவையும் சார்ந்திருக்கிறது. மலேசியா சென்ற ஆண்டு 1.65 பில்லியன் டாலர் மதிப்புள்ள பனை எண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது.