காணொளி மூலம் கல்கி சாமியார் அறிவிப்பு: நாங்கள் ஓடி ஒளியவில்லை

காணொளி மூலம் கல்கி சாமியார் அறிவிப்பு: நாங்கள் ஓடி ஒளியவில்லை

2 mins read

ஹைதராபாத்: நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. எங்களுக்கு உடல் நலக் குறைவும் இல்லை என்று கல்கி காணொளி மூலம் அறிவித்துள்ளார்.

கல்கியும் அவரது மனைவியும் அமர்ந்தபடி தங்களது பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தோற்றத்தில் அந்தக் காெணாளிப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

"எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டை விட்டு வெளியேறவில்லை. எங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எங்களுக்கு எந்த உடல் நலப் பாதிப்பும் இல்லை. நாங்கள் நலமாகவே இருக்கிறோம். நாங்கள் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை. நேமம் ஆசிரமத்திலேயே இருக்கிறோம். வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. யோகாவும் தியானங்களும் வழக்கமான வகையில் நடந்து வருகின்றன," என்று கல்கி பகவான் என பக்தர்களால் அழைக்கப்படும் விஜயகுமார் கூறியுள்ளார்.

அண்மையில் கல்கி ஆசிரமத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள், ரூ. 44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்படுகிறது. 1980ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தை தொடங்கிய விஜயகுமார், தனது பெயரை கல்கி பகவான் என மாற்றிக்கொண்டார்.

இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கிளகைள் செயல்படுகின்றன.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் ஆசிரமத்துக்கு எதிராக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

சித்தூர் வரதய்யபாளையத்தில் உள்ள ஆசிரமத்தின் தலைமையிடம், நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.