புதுடெல்லி: இவ்வாண்டு பொருளியலுக்கான நோபெல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்கப் பொருளியல் நிபுணா் அபிஜித் பானா்ஜி நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் தான் பணியாற்றி வரும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) செய்தியாளர் களைச் சந்தித்த அபிஜித் பானா்ஜி, இந்தியப் பொருளியல் மோசமான நிலையில் உள்ளது என்பதுதான் தமது தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியை அபிஜித் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நோபெல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்ததாகவும் அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

