ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு (படம்) அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளது.
ஆயினும், சிபிஐ வழக்கிலேயே திரு சிதம்பரத்திற்குப் பிணை கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையும் இவரைக் கைது செய்து காவலில் வைத்து இருப்பதால் இப்போதைக்கு சிறையிலிருந்து இவரால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் திரு சிதம்பரத்திற்குப் பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குத் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் திரு சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் திரு சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, பிணை கோரி திரு சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில் இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனாலும், கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறை கைது செய்து, காவலில் வைத்திருப்பதால் தற்போதைக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக திரு சிதம்பரம் லஞ்சம் பெற்றார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை மறுத்து வரும் திரு சிதம்பரம், தாம் அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கப்படுவதாகக் கூறி வருகிறார்.

