இந்தியாவுடனான விரிசலுக்குத் தீர்வுகாண மலேசியா முயல்வதாக மலேசிய வர்த்தக அமைச்சர் டேரல் லெய்கிங் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று டாக்டர் மகாதீர் முகம்மது ஐக்கிய நாட்டுப் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியது இந்தியாவைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியதால் மலேசியாவின் செம்பனை எண்ணெய்யைத் தருவிப்பதை நிறுத்த இந்தியாவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
செம்பனை எண்ணெய்யை இந்தியா மலேசியாவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்கிறது. இந்தப் புதிய பூசலால் இந்தோனீசியா ஆதாயம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலைத் தாம் அண்மையில் சந்தித்து புதுடெல்லியுடனான உறவுகளைப் பற்றி அக்கறை தெரிவித்ததாகத் திரு லெய்கிங் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, மலேசிய செம்பனை எண்ணெய் இறக்குமதிகளைப் புறக்கணிக்கப்போவதாகக் கூறிய இந்தியாவின் ஆகப் பெரிய காய்கறி எண்ணெய் வர்த்தக அமைப்பினரைச் சந்திக்க மலேசியாவிலிருந்து குழு ஒன்று அனுப்பப்படும் என்று அந்நாட்டின் விளைபொருள் தொழில்துறை அமைச்சர் தெரேசா குவோக் மலேசிய நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

