சென்னை: பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பசு மாட்டிற்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நிவாரணம் அளித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த முனிரத்னம் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டிற்கு அண்மையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அக்கழிவுகளை அகற்றுவது என முடிவாயிற்று.
அதன்படி தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சைத் துறை இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மாட்டின் வயிற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மொத்தமாக அகற்றப்பட்டன. மொத்தம் 52 கிலோ அளவிலான பொருட்களை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் பசுமாடு நல்ல உடல்நலத்துடன் உள்ளது.இதை அறிந்த தமிழக முதல்வர் பழனிசாமி, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

