பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு

பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு

1 mins read

புதுடெல்லி: கள்ள ரூபாய்நோட்டு புழக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகரித்திருப்பதை இந்தியாவின் தேசிய குற்ற ஆவணப் பிரிவின் (என்சிஆர்பி) அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு 28.1 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு பிடிபட்ட ரூ.15.9 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளைவிட இது சுமார் இரண்டு மடங்கு.

பணமதிப்பிழப்ப்பு நடவடிக்கை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடப்புக்கு வந்தது. அதன் பிறகு வெளியான 2,000 ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகள் 2017ஆம் ஆண்டில் பிடிபட்டன. அவ்வாறு பிடிபட்ட 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளின் மொத்த மதிப்பு 14.97 கோடி ரூபாய் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டில் மொத்தம் 3,55,994 கள்ளநோட்டுகள் பிடிபட்டன. அதற்கு முந்தைய ஆண்டு பிடிபட்ட 2,81,839 கள்ளநோட்டுகளுடன் ஒப்பிடுகையில் அது 26% அதிகம்.

கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்துக்கான நிதி உதவி ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்று குறிப்பிட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.

ஆனால், அந்த நடவடிக்கைக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு கள்ளநோட்டுகள் வங்கிகளில் பிடிபட்டதாக என்சிஆர்பி குறிப்பிட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சந்தேகத்துரிய பணப் பரிவர்த்தனைகள் 480% அதிகரித்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

குஜராத்தில் ஆக அதிகமாக 9 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பிடிபட்டன.