புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர் தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த அமோக வெற்றியை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதி களோடு புதுச்சேரி மாநிலம், காமராஜ் நகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மக்கள் தங்கள் தொகுதிக் கேற்ற தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க கடந்த 21ஆம் தேதி வாக்களித்தனர்.
இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான்குமார் என்.ஆர். காங்கிரசின் புவனேஸ்வரனைவிட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜான்குமார் ஆகமொத்தமாக 14,782 வாக்குகளும் அவரை எதிர்த்து நின்ற என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
நாம் தமிழர் வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகள் பெற்ற இத்தொகுதியில் நோட்டாவுக்கு 426 வாக்குகளும் கிடைத்திருந்தது.
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்காக தன் தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான் குமாரை மீண்டும் எம்எல்ஏவாக ஆக்கியுள்ளார் நாராயணசாமி.
சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடாத நாராயணசாமி, முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும்.
இந்நிலையில் தனக்காக நெல்லித்தோப்பு தொகுதி ஜான்குமாரை விட்டுக்கொடுக்கச்சொல்லி அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவைத்தார் நாராயணசாமி.
அதன்பின்பு நெல்லித்தோப்புக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார் நாராயணசாமி. தனக்காக எம்எல்ஏ பதவியை இழந்த ஜான்குமாரை காமராஜர் நகரில் நிற்கவைத்து எம்எல்ஏ ஆக்கிவிட்டார் நாராயணசாமி.

