காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மருத்துவர்கள்

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மருத்துவர்கள்

1 mins read
4f3a3ec3-3e00-4eda-8944-5dab506adb06
-

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளத்தை தங்களுக்கும் வழங்கவேண்டும் என்று கோரி தமிழக அரசு மருத்துவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

டெங்கி, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் தங்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகக் கூடிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 20,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். காலமுறை ஊதியமும் பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்கவேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கை.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள், பட்ட மேற் படிப்பு மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மற்றொரு அமைப்பான அரசு மருத்துவர்கள் சங்கமும் வரும் 30, 31ஆம் தேதிகளில் இதுபோன்ற போராட்டத்தை நடத்த உள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் எவருக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கக்கூடாது என்றும் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.