உயிரோடு எரிக்கப்பட்ட மாணவி; 16 பேருக்கு மரண தண்டனை

உயிரோடு எரிக்கப்பட்ட மாணவி; 16 பேருக்கு மரண தண்டனை

2 mins read

பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த 19 வயது மாணவி, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 165 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பங்ளாதேஷில், போராட்டங்கள் வெடிக்க நஸ்ரத் ஜஹான் ரஃபியின் மரணம் காரணமானது. நாட்டில் பாலியல் தொல்லை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதும் இச்சம்பவம் மூலம் அனைவரது கவனத்திற்கு வந்தது.

கடந்த மார்ச் மாதம் தலைமையாசிரியர் சிராஜ் உத் டௌலா மீது நஸ்ரத் புகார் அளித்திருந்தார். மார்ச் 27 அன்று தன் அறைக்கு அழைத்துத் தலைமை ஆசிரியர் தன்னை முறைகேடான வகையில் தொட்டதாக அந்த மாணவி தமது புகாரில் கூறியிருந்தார். அதன் காரணமாக தலைமை ஆசிரியர் கைதானார்.

ஏப்ரல் 6ஆம் தேதியன்று பள்ளியில் இறுதித் தேர்வு எழுதச் சென்ற நஸ்ரத்தைக் கும்பல் ஒன்று கல்லூரிக் கட்டடத்தின் மொட்டை மாடிக்கு வரச்செய்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டியது.

சம்பவத்தைத் தற்கொலையாக தோன்றச் செய்வதே கும்பலின் திட்டம் என்றாலும் கை,கால் கட்டப்பட்ட நிலையில் எப்படியோ தப்பித்துக் கட்டடத்திற்குக் கீழ்மாடிக்கு ஓடி வந்துவிட்டார் நஸ்ரத்.

உடலின் 80% தீப்புண் காயங்களால் பாதிக்கப்பட்ட நஸ்ரத், ஐந்து நாட்கள் கழித்து மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் இறப்பதற்கு முன் இறுதி வாக்குமூலம் அளித்தார் என்று போலிசார் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியருக்கு எதிரான புகாரைத் திரும்ப மீட்டுக்கொள்ள நஸ்ரத் மறுத்துவிட்டதால் சிறையில் இருந்தவாறே நஸ்ரத்தைக் கொலை செய்யத் தலைமை ஆசிரியர் ஆணையிட்டதாக போலிசார் தெரிவித்தனர். தானே இந்தக் கொலையை செய்ய ஆணையிட்டதாக நீதிமன்றத்தில் அத்தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 27,000 பள்ளிகள், பாலியல் வன்முறைக்கு எதிராகச் செயற்குழுக்களை அமைக்குமாறு அரசாங்கம் ஆணையிட்டது.

நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக தற்காப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பங்ளாதேஷில் கொலை செய்தவர் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று தண்டனை விதிப்புக்குப் பிறகு கூட்டம் நிரம்பி வழிந்த நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஹஃபிஸ் அஹமத் செய்தியாளர்களிடம் கூறினார்.