தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இம்மாதம் 11, 12ஆம் தேதிகளில் இந்திய, சீனத் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாவது அதிகாரபூர்வமற்ற உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான அந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்ததாகப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வெய்டங் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
வழிநெடுக வரவேற்பு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வியக்கவைத்த விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உளப்பூர்வமாக நன்றி கூறிக்கொண்ட திரு வெய்டங், இருநாட்டு மக்களிடையே அதிகமான கலாசாரப் பரிமாற்றங்கள் இடம்பெறவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதேபோல, திரு மோடியும் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.

