60 பயணிகளைக் காப்பாற்றி மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர்

60 பயணிகளைக் காப்பாற்றி மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநர்

2 mins read

திருச்சி: திருக்குமரன் என்ற பேருந்து ஓட்டுநர் 60 பயணிகளின் உயிரை பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளூரைச் சேர்ந்தவர் திருக்குமரன்.

அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் 1 மகனும் உள்ளனர்.

வழக்கம்போல் திருக்குமரன் வீட்டில் இருந்து வேலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

லால்குடியை அடுத்த மாந்து றையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குச் சென்ற அவர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திண்ணியம் வரை செல்லும் பேருந்தை ஓட்டிச்சென்றார். அந்த பேருந்தில் நடத்துநராக நாகராஜ் இருந்தார்.

பின்னர் திண்ணியத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருச்சி நோக்கி அந்த பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

லால்குடியை அடுத்த சிறுமயங்குடியைத் தாண்டி பேருந்தை ஆற்றுப்பாலத்தில் ஓட்டிக்கொண்டி ருக்கும்போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

எனினும் அவர் பெரும் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்தபின் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, நடத்துநரிடம் "என்னால் பேருந்தை இயக்க முடியவில்லை, நெஞ்சுவலியுடன் தலைசுற்றல் ஏற்படுகிறது," என்று கூறியுள்ளார்.

அதன்பின்பு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீர் கேட்டிருக்கிறார். தண்ணீர் கொடுத்த பின்பு, அவர் பேருந்தின் ஸ்டீரியங்கிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

உடனே பயணிகளும் நடத்து நரும் இணைந்து அவரை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே திருக்குமரன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி, மக்கள், உறவினர், பணிமனை கிளை மேலாளர் உள்ளிட்டோர் கதறியபடி ஓடிவந்துள்ளனர்.

அவரது மகள்கள், "இத்தனை பேரையும் காப்பாத்துனீங்களே அப்பா.. எங்களை இப்படி தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே அப்பா!" என்று நெஞ்சமுருகி கதறி அழுதனர்.

ஆற்றில் பேருந்து இறங்கியிருந்தால் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த திருக்குமரனுக்கு வருத்தத்துடன் நன்றி தெரிவித்து அஞ்சலி செய்தனர் மக்கள்.