300 மீனவர்கள் கரை திரும்பாததால் அச்சம்

300 மீனவர்கள் கரை திரும்பாததால் அச்சம்

2 mins read

கோவா: கோவா ஆழ்கடலில் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 300க்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் புயல் காரணமாக கரை திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது உயிருக்கு என்ன ஆனதோ என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் உடனடியாக இந்திய கப்பல் படையை அனுப்பி அவர்களைத் தேடி மீட்டுத்தர வேண்டும் என்றும் மீனவ அமைப்புகளும் கடலில் சிக்கியுள்ள மீனவர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெற்காசிய மீனவத் தோழமை அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிப்புக்குச் சென்று தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள மீனவர்களின் 40 விசைப் படகுகளை மீட்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மேன்மடலாம் முதல் நீரோடி வரை உள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், கேரள மாநிலத்தில் உள்ள பல மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலில் 40 நாட்கள் வரை தங்கி விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள சூறைக்காற்று புயலாக மாறலாம் என அறிவிப்பு வெளியானதைத் ெதாடர்ந்து கோவா, மஹாராஷ்டிரா, கேரளா போன்ற துறைமுகங்களில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களும் கரை ஒதுங்கியுள்ளனர்.

ஆனால், கோவா பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 40 விசைப்படகுகள் கரை ஒதுங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சூறைக்காற்று வீசும் காரணத்தால் அதில் மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவாவில் சிக்கியுள்ள 40 விசைப்படகுகளில் 2 விசைப்படகு மீனவர்கள் உதவி கேட்டு தொடர்புகொண்டதாகவும் தற்போது அவர்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.