அதிர்ச்சி: 2வது இடத்தில் நோட்டா

அதிர்ச்சி: 2வது இடத்தில் நோட்டா

1 mins read

மும்பை: இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஒரு விசித்திரம் நிகழ்ந்து இருக்கிறது. அது அரசியல் அரங்கில் அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறது.

மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் பல அரசியல் கட்சிகளையும் சுயேட்சைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நோட்டா 27,449 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. நோட்டா என்றால் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று வாக்காளர்கள் தெரிவிக்கும் முடிவாகும்.

லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.

தீரஜ் 134,615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா 13,459 வாக்குகளை மட்டுமே பெற்றது. இருந்தாலும் வாக்காளர்கள் 27,449 பேர் நோட்டா பொத்தானை அழுத்தி தாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதை தெரிவித்தனர்.

ஒரு தொகுதியில் இரண்டாம் இடத்தைப் பெறும் அளவுக்கு நோட்டா முடிவுகள் இதுவரை இருந்தது இல்லை. இந்தியத் தேர்தல் வரலாற்றில் அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நோட்டா இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியாகவும் வினோதமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.