தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் டெல்லிவாசிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
காற்று மெதுவாக வீசுவதால் காற்றுத் தரம் மேலும் மோசமடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றுக் காலை பத்து மணியளவில் டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 305ஆக இருந்தது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், அந்தக் குறியீடு 50க்குக் கீழிருந்தால்தான் காற்றுத் தரம் நன்றாக இருப்பதாகக் கூற முடியும். 300க்கு மேல் இருந்தால் மிக மோசமான நிலையை எட்டிவிட்டது என்றும் 400ஐத் தாண்டினால் படுமோசமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.
இந்நிலையில், காற்றுத் தரக் குறியீடு இன்றைக்கு 324 வரை செல்லலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் வெளியிடங்களுக்குச் சென்று தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலை நிலவுகிறது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனr.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான விஜய் கோயல் குற்றம் சுமத்தியுள்ளார்.
"டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதைக் குறைப்பதற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பாலங்கள் கட்டுவது, நெடுஞ்சாலைகளை அமைப்பது, சாலைகளை விரிவுபடுத்துவது என மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது," என்று அவர் சொன்னார்.
காற்று மாசுபாட்டிற்கு வாகனங்கள் வெளியிடும் புகையும் காரணமாகக் கூறப்படுகிறது. அதற்காக ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகனத் திட்டத்தை டெல்லி அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, முதல்நாள் ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் இயக்கப்பட்டால் மறுநாள் இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்ல முடியும்.
ஆனால், செய்திகளில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே ஆம் ஆத்மி அரசு அந்தத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்று திரு கோயல் குறைகூறினார்.
அடுத்த மாதம் 4ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை ஒற்றைப்படை-இரட்டைப்படை திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பின் வயல்களில் எஞ்சியுள்ள தாள்களை எரிப்பதே காற்று மாசுபாட்டிற்குக் காரணம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

