இந்தியா: புதிய வேலைகள் குறைந்தன

இந்தியா: புதிய வேலைகள் குறைந்தன

1 mins read

இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 1.3 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டதாக 'ஈஎஸ்ஐசி' எனப்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சம்பளப் பதிவேட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய ஜூலை மாதத்தைக் காட்டிலும் இது 144,000 குறைவு. ஜூலையில் 1.44 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படன.

2018-19 நிதியாண்டில் 14.9 மில்லியன் பேர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தில் இணைந்தனர் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கை கூறுகின்றது. 2017 செப்டம்பர் முதல் 2019 ஆகஸ்ட் வரை மொத்தம் 29.7 மில்லியன் பேர் அந்த ஈட்டுறுதித் திட்டத்தில் சேர்ந்தனர்.

'ஈஎஸ்ஐ' நிறுவனத்தின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வுக்கால நிதி அமைப்பான 'ஈபிஎஃப்ஓ', ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் புதிய சந்தாதாரர்களுக்கான சம்பளப் பதிவேட்டுத் தரவுகள் அடிப்படையில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆயினும், இந்த அறிக்கையைக் கொண்டு முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு நிலவரம் பற்றிய வெவ்வேறு கண்ணோட்டங்களை அறிய முடியும் என்றும் இதைக் கொண்டு முழுமையான அளவில் வேலைவாய்ப்பு நிலவரத்தைக் கணக்கிட முடியாது என்றும் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.