ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அரசால் வேலை இழந்த இரு பெண் நடத்துநர்கள் தங்கள் உயிரை விட்டதால் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் நேற்று 25வது நாளாக தீவிரம் அடைந்தது.
போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது குறித்து போக்கு வரத்து ஊழியர்களுடன் ஒரு சுமுக பேச்சுவார்த்தை நடத்தாத மாநில அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட 48,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் நடத்துநர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர்.
இந்த இறப்புச் சம்பவங்களின் எதிரொலியாக கோபத்தில் ஊழி யர்கள் கொந்தளித்துப்போனதால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து 48,000 ஊழியர்களை ஒரேநாளில் பணியில் இருந்து நீக்கினார் சந்திரசேகரராவ்.
இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள் போக்குவரத்து பணி மனைகள் முன்பு போராட்டம், மறியல், கண்டனக் கூட்டம் என தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
கம்மம் மாவட்டம், கவிராஜீ நகரைச் சேர்ந்தவரான நீரஜா, நடத்துநராகப் பணியாற்றி வேலை இழந்ததால் இந்த சோகத்திலேயே வீட்டில் உயிரை விட்டார்.
இதையடுத்து நீரஜா பணியாற்றிய சாதுபள்ளி பேருந்து டெப்போவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஊழியர்கள் பேருந்துகளை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். டெப்போ அலுவலக கண்ணாடி களையும் அடித்து நொறுக்கினர்.
இதேபோல் சித்திபேட்டையைச் சேர்ந்த பெண் நடத்துநர் லதா மகேஸ்வரி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதுவரை நான்கு ஊழியர்கள் உயிரை மாய்த்துக் கொண்டும் எட்டு பேர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
ஒருபக்கம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாள்பட்ட, தீராத நோய்களால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு மாதாமாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கி கர்ண வள்ளலாக ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பெயரும் புகழும் பெற்றுவரும் நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் மக்களின் சாபத்துக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இவற்றை எல்லாம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கி றாரா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

