டெல்லியில் பெண்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம்

டெல்லியில் பெண்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் அரசு, கிளஸ்டர் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்யும் திட்டம் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது.

டெல்லியில் அரசுப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள தாகவும் அதன்மூலம் அவர்கள் பாதுகாப்பான பயண அனுபவத்தை உணரமுடியும் என்றும் கட்ட ணத்தின் அடிப்படையில் அவர்கள் வாகனத்தை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

டிக்கெட் வாங்கியும் பெண்கள் பயணிக்கலாம். டிக்கெட் வாங்கி பயணம் செய்ய முடியாதவர்கள் இலவசமாக பயணம் செய்வதை ஊக்கப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி நேற்று இத்திட்டம் டெல்லியில் அமலுக்கு வந்தது.

டெல்லியைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் பயணி கூறுகையில், "இது சிறப்பான நடவடிக்கை. டிக்கெட் வாங்க முடியாதவர்கள் இனி பேருந்துகளில் இலவச பயணம் செய்யமுடியும்," என்றார்.

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான வரலாற்று முயற்சி என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த திட்டத்தை பெண்கள் வரவேற்றுள்ளனர்.