ஆயுள் தண்டனை கைதிக்கு சிறையில் திருமணம்

ஆயுள் தண்டனை கைதிக்கு சிறையில் திருமணம்

1 mins read

கொலைக் குற்றவாளி ஒருவருக்கு சிறைக்குள்ளேயே திருமணம் நடந்த சம்பவம் பெரும் வியப்பை அளித்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், நாபா பகுதியைச் சேர்ந்தவர் துருவ் என்ற மந்தீப் சிங், 35. தமது கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரையும் அவருடைய உதவியாளரையும் கொலை செய்த குற்றத்திற்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் பத்தாண்டுகளைக் கழித்துவிட்ட மந்தீப் சிங், விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும் மந்தீப்பும் மற்றவர்களைப் போல குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என இவருடைய தாயார் ஆசைப்பட்டார்.

மந்தீப்பைத் திருமணம் செய்துகொள்ள பவன்தீப் கவுர் என்ற பெண் சம்மதித்தார். 2016ஆம் ஆண்டிலேயே இவ்விருவருக்கும் திருமணம் செய்துவைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், போலிஸ் அறிக்கையைக் காரணம் காட்டி, மந்தீப்பை பரோலில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆனாலும், மந்தீப்பின் புகைப்படத்தை வைத்து அப்போதே திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டார் பவன்தீப்.

இந்நிலையில், இவ்வாண்டு ஜூலையில் மீண்டும் ஒரு மாதம் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார் மந்தீப். இம்முறையும் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், சிறை வளாகத்திலேயே மந்தீப்-பவன்தீப் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பாட்டியாலா சிறை வளாகத்தினுள் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக மந்தீப்புக்கு ஆறு மணி நேரம் மட்டுமே அனுமதி தரப்பட்டது.