ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிந்தது

ஜம்மு-காஷ்மீர் இரண்டாகப் பிரிந்தது

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அதிகாரபூர்வமாக இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இது, புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின் நடப்புக்கு வந்தது. இனி காஷ்மீர் மாநிலமல்ல. ஜம்மு-காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படும்.

இதையடுத்து இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும் சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படுவதாகவும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானமும் ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவும் தீா்மானமும் மக்களவையில் மறுநாள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவால் ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த தனிக்கொடி, அரசமைப்புச் சட்டம், தனி தண்டனைச் சட்டம் ஆகியவை முடிவுக்கு வந்தன.

மத்திய அரசின் தீா்மானத்துக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கும் அதிபர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

அப்போது அக்டோபா் 31ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையுடனும் லடாக் சட்டப் பேரவை இல்லாமலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த நாள் அக்டோபா் 31ஆம் தேதியாகும்.

இந்த நாளில், ஜம்மு-காஷ்மீா் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஸ்ரீநகரிலும் லே நகரிலும் நடைபெற்ற இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் ஜம்மு-காஷ்மீருக்கு கிரீஷ் சந்திர முர்முவும் லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணைநிலை ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீருக்குப் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை, சட்டம்-ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றைத் தவிர பிற துறைகள் தொடா்பாக சட்டங்களை இயற்றலாம்.

யூனியன் பிரதேசங்களான டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைகள் உள்ளன. இருப்பினும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநரின் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன.