புதுடெல்லி: இந்திய பத்திரிகையாளர்கள் உட்பட உலகம் முழுவதும் சுமார் 1,400 பேர் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டனர். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை வாட்ஸ்ஆப் செயலி மூலம் ஊடுருவச் செய்து உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த இணையத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரேலிய நிறுவனத்தின் மீது வாட்ஸ்ஆப் வழக்குத் தொடுத்துள்ளது.
இந்தியாவில் 17வது மக்களவைப் பொதுத் தேர்தலின்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 'பெகாசஸ்' என்ற ஸ்பைவேர் மென்பொருள் மூலம் இந்திய பத்திரிகையாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கண்காணிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான 'வாட்ஸ்ஆப்' வழக்குத் தொடுத்துள்ளது.
இதில், வாட்ஸ்ஆப் செயலி மூலம் சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது.
'பெகாசஸ்' என்ற இஸ்ரேலிய ரகசிய மென்பொருள் மூலம் அவர்கள் பின்தொடரப்பட்டனர் என்றும் 'பெகாசஸ்' மென்பொருளை இயக்கிய 'என்எஸ்ஓ' குழுமம் மற்றும் 'கியூ சைபர் டெக்னாலஜீஸ்' ஆகியவை 'மிஸ்டுகால்' மூலமே வாட்ஸ்ஆப் விதிகளை மீறியுள்ளன என்றும் வாட்ஸ்ஆப் கூறியுள்ளது.
இது குறித்து பேசிய வாட்ஸ்ஆப்' நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுடைய அடையாளத்தையோ எண்ணிக்கையையோ நான் வெளியிட முடியாது. ஆனால் கண்காணிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சிறியது அல்ல என்று மட்டும் கூறமுடியும்," என்றார்.
ஆனால் எத்தனை பேர் இந்த கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர், அவர்கள் யார் யார் என்ற விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
கண்காணிக்க விரும்பும் நபரை 'லிங்க்' ஒன்றை கிளிக் செய்ய வைத்து தனது கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவருகிறது 'பெகாசஸ்'.
பின்னர், அந்த நபரின் கை பேசியில் 'பெகாசஸ்' செயலி அவருக்கு தெரியாமலே நிறுவப்படு கிறது.
இதன் மூலம் மறைச் சொல், கைபேசியில் பதிந்துள்ள கைபேசி எண்கள், காலண்டரில் பதிந்துள்ள நிகழ்வுகள் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உள்ளிட்ட செயல்களை பெகாசஸ் ரகசியமாக செய்கிறது.

