இஸ்லாமாபாத்: குருநானக் பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் புனித தலத்துக்கு வரும் சீக்கியர்களுக்கு விசா, முன் பதிவு தேவையில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறி வித்துள்ளார்.
சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் 550வது பிறந்த நாள் வருகிற 12ஆம் தேதி கொண் டாடப்படவுள்ளது. கர்தார்பூரில்தான் குரநானக் 18 ஆண்டுகள் தனது கடைசி காலத்தை கழித்தார்.
அந்த புனித தலம் அனைத்துலக எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
அந்த வழிபாட்டுத் தலத்தையும், இந்தியாவையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சாலை திறப்பு விழா வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
அப்போது பாகிஸ்தான் பல நிபந்தனைகளை விதித்தது.
கர்தார்பூருக்கு வரும் ஒவ்வோர் இந்தியரும் 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 10 தினங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் உரிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. அந்த நிபந்தனைகளை விலக்க இந்தியா வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கர்தார்பூருக்கு வரும் சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும். குருநானக்கின் பிறந்த நாளையொட்டி திறக்கப்படும் கர்தார்பூர் வழித் தடத்தில் வருபவர்கள் கட்டணம் செலுத்தவும் தேவையில்லை," என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இம்ரான்கானின் அறிவிப்பு சீக்கியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

