ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜெர்மனியின் முக்கிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார்.
நேற்று காலை அதிபர் மாளிகையில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உடல்நலம் குன்றியுள்ளபோதிலும் மருத்துவர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்குத் திருமதி மெர்க்கல் சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது டெல்லி பயணத்தின்போது அவர் முகக்கவசம் அணிந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முப்படையினர் அணிவகுப்பின்போது இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
அப்போது உடல்நலப் பிரச்சினை காரணமாக திருவாட்டி மெர்க்கல் அமர்ந்திருந்தார்.
பின்னர், ராஜ்கட் பகுதிக்கு சென்ற திருவாட்டி மெர்க்கல் அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திருவாட்டி மெர்க்கலும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
நேற்றைய ஆலோசனையின்போது மோடி-ஏஞ்சலா மெர்க்கெல் முன்னிலையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ஐந்து கூட்டுப் பிரகடனங்களும் விண்வெளித்துறை, உள்நாட்டு விமான போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 ஒப்பந்தங்களும் நேற்று கையொப்பமாகின.
"இன்றைய சந்திப்பின்போது பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இருதரப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் உறுதிபூண்டோம். ஜெர்மனியில் உள்ள பொருளாதார ஆற்றல் அமைப்புகளின் முன்னோடி தொழில்நுட்பத்தின் உதவியுடன் 2022ஆம் ஆண்டுக்குள் 'புதிய இந்தியா'வை கட்டமைக்கவும் உறுதி கொண்டோம்," என தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீரமைப்புகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக இந்தியா-ஜெர்மனி இடையிலான கூட்டுறவு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்த பிரதமர் மோடி,
உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முனையங்களில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஜெர்மனிக்கு அழைப்பு விடுத்தார்.
"இந்தியாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பை அளித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுக்கு நான் நான்காவது முறையாகப் பயணம் மேற்கொள்கிறேன். ஜெர்மனியும் இந்தியாவும் மிக நெருங்கிய நட்புறவால் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய நாடான இந்தியா மீது நாங்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கிறோம்," என்று செய்தியாளர்களிடம் திருவாட்டி மெர்க்கல் கூறினார்.

